பணியை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் எனத் தெரியாமல் பணிக்கு
அடிமையாகிவிடுபவர்கள் உண்டு. பணியும் செயல்பாடுமே போதைகளாகிவிடுகின்றன. எந்த போதையும் ஆபத்தானது; அது மதுவாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. ஏனென்றால், அது புலன்களை மந்தமாக்கிவிடும் சக்தி வாய்ந்தது.
நாற்காலியே முக்கியம் என்றும், மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரமே பதக்கமென்றும், பரிசு பெறும் புகைப்படங்களே ஆதர்சம் என்றும் வாழும்
பலர் ஒய்வு பெறும்போது தங்களுக்குத் தாங்களே பச்சாதாபப்பட்டுக் கொள்வதைப் பார்க்க முடியும். ' இதற்காகவா வாழ்க்கையின் எத்தனையோ இனிய நிகழ்வுகளை நாம் இழந்தோம்' என அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக் காணலாம். சாதனைகள் செய்யும் நோக்கில் அப்பாவின் பிறந்த நாளை, பெற்றோர்களின் திருமண நாளை, குழந்தைகளின் தேர்வுத் தேதியை
மறந்த இவர்கள், தங்கள் இல்லத்திலேயே கருணை இல்ல உறுப்பினராக காலம் தள்ளுபவர்கள்.
வெ. இறையன்பு அவர்களின் "எப்போதும் இன்புற்றிருக்க ..." நூலிலிருந்து ....